ஆன்மிகவாதி போர்வையில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சிவசங்கர் பாபா!

199

கடந்த ஒரு மாதமாகவே பள்ளிகளில் நடைபெற்று வந்த பாலியல் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.
அண்மையில் பத்மா சேஷாத்திரி பாலபவன் பள்ளியில் மாணவிகள் சந்தித்த பாலியல் கொடுமைகள் சமூக வலைத்தளங்களில் அம்பலமானது.அதனைத்தொடர்ந்து , சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி,சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளி உள்பட சில பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் ஆன்மிகவாதியாக அறியப்படும் 72 வயது சிவசங்கர் பாபா மீது அவர் நடத்தி வரும் பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.சிவசங்கரன் என்கிற சிவசங்கர பாபாவின் பாலியல் குற்றங்களை ஆராய்ந்தால் அது மற்ற பள்ளிகளில் நடைபெற்ற பாலியல் குற்றங்களை விடவும் மோசமானதாக உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை சிவசங்கரன் நடத்தி வருகிறார்.இது உண்டு உறைவிட பள்ளியாக செயல்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக பள்ளிக்கூடத்தை நடத்தி வரும் சிவசங்கரன், மாணவிகளிடம் தன்னை கிருஷ்ணன் என கூறி கொண்டு மாணவிகளிடம் அத்துமீறி நடந்துள்ளார்.
இவர் மீது மாணவிகள் கூறும் புகார்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியைத் தருகிறது.
மாணவிகளுக்கு முத்தம் கொடுப்பது, கட்டிப்பிடிப்பது உள்ளிட்ட அட்டூழியங்களை சிவசங்கரன் அரங்கேற்றி உள்ளார்.மாணவிகள் தேர்வுக்கு செல்லும்போது ஆசிர்வாதம் என்ற பெயரில் மாணவிகளிடம் அத்துமீறி நடந்துக்கொள்வதை வழக்கமாகவே வைத்துள்ளார் சிவசங்கரன்.
மேலும்,ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு குளிர்பானத்தில் மதுபானங்களை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த பாலியல் புகார்களுக்கு இடையே பள்ளிக்கூட வளாகத்தில் மாணவிகளுடன் சேர்ந்து சிவசங்கர் பாபா நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி அவர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகிறது.


இந்த சூழ்நிலையில் சிவசங்கரன் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சமூக வலைத்தளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. ஆனால் சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை,
சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இதய அறுவை சிகிச்சை செய்து, சிகிச்சை பெற்று வருவதால், அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என பள்ளி நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் வெளியான பாலியல் புகாரையடுத்து சிவசங்கரனால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் மூன்று பேர் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அது தவிர,ஆன்மிகவாதி போர்வையில் சிவசங்கரன் நடத்திய லீலைகள் பொதுவெளியில் அம்பலமானதால் அது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

Advertisement