கருணாநிதியின் சாதனைகள் இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும் என முதலமைச்சர் பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானத்தின் மீது உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும்,  பன்முக தன்மை கொண்ட தலைவர் கருணாநிதி, 5 முறை தமிழக முதலமைச்சராக இருந்த பெருமைக்குரியவர் என்றும், சமூக விழிப்புணர்வை தன்னுடைய எழுத்தின் மூலம் ஏற்படுத்தியவர் கருணாநிதி எனவும் குறிப்பிட்டார்.  இந்தி திணிப்பை எதிர்த்து 13 வயதினிலே போராடியவர் கருணாநிதி என்று குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி, சிறப்பான திட்டங்களை தமிழகத்துக்கு அவர் அளித்தவர் என்றும், அதை அதிமுக சில நேரங்களில் பின்பற்றியும் உள்ளது எனவும் கூறினார்.  தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வென்றவர் கருணாநிதி என்றும் அவருடைய சாதனை இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும்” என்றும் புகழாரம் சூட்டினார்.

இதனைத் தொடர்ந்து, கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் துக்கம் தாங்காமல் கதறி அழுதார். தம்மை பேச அழைக்கும் போதெல்லாம் உணர்ச்சியோடு, எழுச்சியோடு எழுந்து நிற்பேன் என்றும், ஆனால் இன்று கருணாநிதிக்காக இரங்கல் தீர்மானத்தில் பேச அழைத்த போது உடல் தளர்ந்து உள்ளம் சோர்ந்து துவண்ட நிலையில் இருப்பதாக கூறி பேசத் தொடங்கினார். 95 ஆண்டு காலம் வாழ்ந்தவர் கலைஞர் என்றும், தமிழுக்காக, தமிழ் நாட்டுக்காக, தமிழ் மக்களுக்காக உழைத்து விட்டு அண்ணாவின் பக்கத்திலே ஓய்வெடுக்கிறார் எனவும்  கூறினார். கலைஞர் தனி மனிதர் அல்ல. பன்முகத்தன்மை கொண்டவர் என்றும், அவரை ஒரு முகத்தோடு அடக்கி விட முடியாது எனவும் துரைமுருகன் பேசினார். தொடர்ந்து கருணாநிதியை பற்றி துரைமுருகன் பேசமுடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

Advertisement