தாய், தந்தைக்கு சோறு போடாமல் துன்புறுத்தல்… பிள்ளைகளுக்கு பாடம் புகட்டிய ஆட்சியர்…

759

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன், விவசாயி. இவரது மனைவி பூங்காவனம். இவர்களது மகன்கள் பழனி, செல்வம். பழனி அரசு பஸ் கண்டக்டராகவும், செல்வம் கட்டிட தொழிலாளியாகவும் வேலை செய்து வருகின்றனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கண்ணன் தனது 5 ஏக்கர் நிலத்தை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 2 மகன்களுக்கும் சரி பாதியாக பிரித்து வழங்கி ‘செட்டில்மென்ட்’ பத்திரப்பதிவு மூலம் எழுதி வைத்தார். ஆனால் சொத்துக்களை பெற்றுக்கொண்டு மகன்களின் பெற்றோருக்கு சாப்பாடு கூட போடாமல் தவிக்க விட்டுள்ளனர். இளைய மகன் செல்வம் அவரது தந்தையை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த கண்ணனும், அவரது மனைவி பூங்காவனமும் கடந்த வாரம் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமியிடம் புகார் மனு அளித்தனர். இந்த மனு குறித்து விசாரிக்க பொறுப்பு உதவி கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் கலெக்டர் வழங்கினார்.

பின்னர் அவர் கண்ணனின் 2 மகன்களையும் அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது மூத்த மகன் பழனி மட்டும் பெற்றோருக்கு ஜீவனாம்சம் தருவதாக தெரிவித்து உள்ளார். இளைய மகன் செல்வம் சொத்துக்களை தர மறுத்துவிட்டார். இதுதொடர்பான அறிக்கையை கலெக்டரிடம் உதவி கலெக்டர் ஒப்படைத்தார். இதையடுத்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டத்தின் கீழ் கண்ணன் அவரது மகன்களுக்கு தான செட்டில்மென்ட் பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. இளைய மகன் செல்வம் வேறொருவருக்கு விற்ற நிலத்தின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் 5 ஏக்கர் நிலமும் விவசாயி கண்ணன் பெயரில் 2.15 ஏக்கரும், பூங்காவனம் பெயரில் 2.85 ஏக்கரும் பட்டா மாற்றம் செய்யப்பட்டது.

தொடர்ந்து கண்ணன், அவரது மனைவி பூங்காவனத்திடம் நிலத்தின் உரிமைக்கான பட்டாவை கலெக்டர் வழங்கினார். பத்திரத்தை பெற்றுக்கொண்ட அந்த பெற்றோர் கலெக்டரிடம் கண்ணீர்விட்டு அழுதனர். அப்போது உங்கள் மகன்களால் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்குமாறு கலெக்டர் ஆறுதல் கூறினார். பின்னர் கலெக்டர் கந்தசாமி பேசுகையில், “வயது முதிர்ந்த காலத்தில் பெற்றோரை பாதுகாப்பது மகன்களின் கடமை. பெற்றோரை தவிக்கவிடும் மகன்களுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும். நிலம் கிடைத்தால் உழைத்து வாழ்வோம் என்ற முதியவர்களின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது. சட்டப்படி சொத்துக்களை மீட்டு ஒப்படைத்திருக்கிறோம். உரிய பாதுகாப்பும் அவர்களுக்கு வழங்கப்படும். இதன்பிறகு தாங்கள் விரும்பும் நபர்களுக்கு இந்த சொத்துக்களை வழங்கும் உரிமை அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. முதிர்வயதில் இதுபோன்ற துயரத்தில் தவிப்போர் புகார் அளித்தால் உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of