திங்கள் முதல் இரவு நேர ஊரடங்கும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்

1362

மகாராஷ்டிராவில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு நேர ஊரடங்கும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல் செய்யப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் அதிவேகமாகப் பரவிவரும் பெருந்தொற்றை தடுப்பது தொடர்பாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் மும்பையில் அவசர அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் நவாப் மாலிக் செய்தியாளர்களுக்கு அறிவித்தார்.

அதன்படி, மகாராஷ்டிராவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இரவு ஊரடங்கின்போது மால்கள், ஓட்டல்கள், திரையங்கம், உடற்பயிற்சி கூடம், மதுபான விடுதிகள் உள்ளிட்டவை மூடப்படும் என்றும் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பகல் நேரத்தில் 5 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூட தடை விதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய சேவை தவிர, மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நவாப் மாலிக் தெரிவித்தார்.

Advertisement