தொடரும் மணல் கொள்ளை – வருங்காலம் நம்மை மன்னிக்காது – மாநில அரசை விளாசிய நீதிபதிகள்

116

கன்னியாகுமரி மாவட்டம், தேவதானபுரத்தை சேர்ந்த பென்சிங் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், கன்னியாகுமரி அருகே உள்ள குளவி மலையில் சட்ட விரோதமாக குவாரி அமைத்து பாறைகளை உடைத்து விற்பனை செய்வதாக கூறப்பட்டுள்ளது.

சட்டவிரோத குவாரியால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் குவாரிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இயற்கை நமக்கு வழங்கிய இயற்கை வளங்களை அழித்தால், வருங்காலம் நம்மை மன்னிக்காது என நீதிபதிகள் கூறினர். மேலும் தமிழக அரசுக்கு கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு ஆற்று மணல் மற்றும் எம்-சாண்ட் தேவைப்பட்டது? என்றும், கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள மணல் குவரிகளில் எவ்வளவு மணல் எடுக்கப்பட்டுள்ளது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எம்-சாண்ட் மற்றும் மணல் குவாரிகளால் அரசுக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு? என்றும் நீதிபதிகள் வினவினர்.

வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு ஏன் எம்-சாண்ட் மற்றும் மணலை இறக்குமதி செய்ய தனியார்களுக்கு அனுமதி வழங்க கூடாது? என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். இதற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை 3 வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.