பாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..!

337

கனமழை தொடர்பாக தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து உள்ளது. இதனால், சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஆங்காங்கு, மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில்தான் தமிழகத்தில் 22 ஆம் தேதியான இன்றைய தினம், மிக கனமழை பெய்ய கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், சில பகுதிகளில் அதிக பட்சமாக 22 சென்டிமீட்டர் வரை இந்த மழை கொட்டித்தீர்க்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதை அடுத்து ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக, தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இந்த ரெட் காலர் பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கொடைக்கானலில், இரண்டு நாட்களுக்கு சுற்றுலா தலங்கள் மூடப்படும் என்றும் சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் மிகவும் மோசமான வானிலை இருக்கும், பொதுமக்கள் வெளியே செல்லாமல் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும்.

போக்குவரத்து, பாதிப்பு மின்வசதி துண்டிப்பு ஏற்படக்கூடும், பாதுகாப்பு இல்லாத பகுதிகளுக்கு செல்வதை, பொதுமக்கள் தவிர்க்க வேண்டும், மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் ரெட் அலர்ட் காலகட்டத்திற்கு பொருந்தக் கூடியதாகும்.

இந்த நிலையில் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை இன்று வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திராவுக்கு திசைமாறி செல்வதால், தமிழகத்து விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் பரவலாக மழை தொடருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை வெள்ள அபாய அளவான 71 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, பொதுப்பணித்துறை சார்பில் பரளியாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பரமக்குடி, திருவாடானை, ராமேஸ்வரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை முழுவதும் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.