கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள்

323

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இரண்டாம் கட்டமாக ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் பழனிசாமி, சென்னை எழும்பூரில் இருந்து ரயில் மூலம் இன்று காலை நாகை சென்றடைந்தார். முதலமைச்சருடன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் ஆகியோரும் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து புயல் பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 27 வகையான நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கஜா புயலால் நாகை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் நாகை மாவட்டத்தில் மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார்.

நாகை மாவட்டத்தில் 592 மின்மாற்றிகள் சேதமடைந்ததாகவும், அதில் 341 மின்மாற்றிகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு மனசாட்சியுடன் வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.