ஏப்ரல் 29-இல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

461

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 59,618 மாணவ, மாணவிகளும் 38 ஆயிரத்து 176 தனித் தேர்வர்களும் எழுதினர்.

இதைத் தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் நடைபெற்றது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளன.தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன்கூடி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகத் தேர்வு முடிவு அனுப்பப்படும்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: இதையடுத்து வரும் மே 2-ஆம் தேதி பிற்பகல் முதல் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

மறுகூட்டலுக்கு தேர்வர்கள் எந்தவொரு பாடத்துக்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே 2-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் மே 4-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.45 மணி வரை பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்களது தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம் எவ்வளவு?: மறுகூட்டலுக்கு மொழிப்பாடத்துக்கு (பகுதி 1)- ரூ.305, ஆங்கிலப் பாடத்துக்கு (பகுதி- 2)- ரூ.305, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு தலா ரூ.205, விருப்ப மொழிப் பாடத்துக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை பள்ளிகளிலும் தனித்தேர்வர்கள் அவர்களது தேர்வு மையங்களிலும் பணமாகச் செலுத்த வேண்டும். அப்போது கொடுக்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சிறப்பு துணைத் தேர்வு: மார்ச் 2019-இல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெறாதோருக்கும் தேர்வுக்கு வருகை புரியாதவர்களுக்கும் நடத்தப்படும் சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுகள் வரும் ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூன் 22-ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியாக அறிவிப்பு வெளியாகும் என அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

 

Advertisement