ஆரோக்கியமான நாடுகளில் இந்தியாவுக்கு 120–வது இடம்!

365

யார் ஒருவர் நோய் இல்லாமல் இருக்கிறாரோ, அவரே உண்மையான செல்வந்தர்.அவ்வையின் இந்த பொன் மொழியை ஒப்பிட்டு பார்த்தால் அவையத்தில் யாரும் உண்மையான செல்வந்தராக இருக்க முடியாது அனைவருமே பரம ஏழைகள்தான் அம்பானி, அதானி கூட இதற்கு விதிவிலக்கு அல்ல.

காரணம் இன்றைய சுகாதாரமற்ற சுற்றுச்சூழலாலும், உணவுப் பழக்கத்தாலும் அனைவருமே ஏதாவது ஒரு நோய் வாயில் சிக்கி தவித்து கொண்டு இருக்கிறோம். எனவே நோய் இல்லாமல் இங்கு யாரும் இல்லை. குறைந்த அளவில் யாருக்கு நோய் இருக்கிறதோ அவரே அவ்வையின் வாக்குப்படி இன்றைய செல்வந்தர்.

அதைப்போன்று ஆரோக்கிய மான நாடுகள் எவை, எவை என்று ஒரு கணக்கெடுப்பு நடந்து இருக் கிறது. அதாவது முழு சுகாதாரமான நாடுகள் என்பது இதற்கு பொருள் அல்ல. சுற்றுசுழல் பாதிப்பு குறைவாக மனிதர்கள் வாழ்வதற்கு ஓரளவு ஏதுவாக இருக்கும் நாடுகள் என்றே இதற்கு பொருள் கொள்ள வேண்டும்.
169 நாடுகள்
169 நாடுகளில் ‘புளூம்பெர்க்’ என்ற அமைப்பு நடத்திய உலக சுகாதார கணக்கெடுப்பில் முதல் 5 இடங்களை ஸ்பெயின், இத்தாலி, ஐஸ்லாந்து, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் பிடித்து இருக்கின்றன.
இந்தியா கடந்த 2017–ம் ஆண்டில் 119–வது இடத்தில் இருந் தது. இந்த ஆண்டில் ஒரு இடம் பின்நோக்கி 120–வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.
அண்டை நாடுகள்
நமது அண்டை நாடுகளான சீனா 3 இடங்கள் முன்னேறி 52–வது இடத்தை பிடித்துள்ளது. 2040–ம் ஆண்டில் வாழ்வதற்கு உகந்த ஆரோக்கியமான நிலையில் 35–வது இடத்தில் உள்ள அமெரிக்காவை சீனா விஞ்சும்.
இலங்கை சுகாதாரத் திற்கு செலவு செய்வதில் பின்தங்கியதால் ஒரு இடம் சறுக்கி 66–வது இடத்தை யும், வங்காளதேசம் 3 இடம் முன்னேறி 91–வது இடத்தையும் பிடித்துள்ளன. நேபாளம் 110–வது இடத்தை தக்கவைத்து உள்ளது. மேற்கண்ட நாடுகள் இந்தியாவை காட்டிலும் முந்தி இருக்கின்றன. பாகிஸ்தான் 124–வது இடத்தையும், மியான்மர் 129–வது இடத்தையும், ஆப்கானிஸ்தான் 153–வது இடத்தையும் பிடித்து இந்தியாவை விட பின்தங்கி உள்ளன.
தனி மனித சுகாதார செலவு
சுகாதாரத்திற்காக சில நாடுகளில், அதன் அரசே 70 சதவீதம் செலவு செய்து இருக்கின்றன. அவை முதல் பத்து இடங்களைப் பெற்ற ஐஸ்லாந்து, ஜப்பான், சுவிட்சர்லாந்து, சுவீடன், நார்வே உள்ளிட்ட நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கவை ஆகும்.
மற்ற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிட்டு பார்க்கையில், ஸ்பெயின் மற்றும் இத்தாலி சுகாதாரத்திற்காக குறைந்த அளவில் (3 ஆயிரத்து 500 டாலர்) செலவு செய்து இருக்கின்றன. இருப்பினும் அவை முதல் இரண்டு இடத்தில் உள்ளன.
தனி மனிதர் சுகாதரத்திற்காக அமெரிக்கா அதிகபட்சமாக ரூ.7 லட்சத்து 82 ஆயிரம்
(11 ஆயிரம் டாலர்) செலவு செய்கிறது. இருந்தாலும் அந்த நாடு ஒரு இடம் சறுக்கி 35–வது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து தனி மனிதர்களுக்காக ரூ.2 லட்சத்து 84 ஆயிரம்  (4 ஆயிரம் டாலர்) செலவு செய்கிறது. கடந்த 2017–ம் ஆண்டில் 23–வது இடத்தில் இருந்தது, தற்போது 19–வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. கியூபா முன்னேற்றம் கண்டு 31–வது இடத்தில் இருந்து 30–வது இடத்திற்கு வந்து இருக்கிறது.
இந்தியாவில் குறைவு
இந்தியா தனிமனித சுகாதார செலவிற்கு மிக குறைந்த அளவாக ரூ.17 ஆயிரம் (240 டாலர்) செலவு செய்து வருகிறது. இதிலும் சில செலவினங்களை மட்டுமே அரசு செய்கிறது. மற்றவைகளை தனிநபரே செய்கிறார்கள்.
ஆசிய நாடுகளிலேயே சிங்கப்பூர் மட்டும் தான் 4–வது இடத்தில் இருந்து 8–வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. ஜப்பான் 7–வது இடத்தில் இருந்து 4–வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இந்த கணக்கெடுப்பின் கடைநிலையில் அதிகமாக ஆப்பிரிக்க நாடுகளே உள்ளன. அதில் 30 நாடுகளில் 27 சுகாதாரமற்றவை ஆகும்.
சுகாதார புள்ளிவிவரம்
‘புளூம்பெர்க்’ நடத்திய இந்த கணக்கெடுப்பு முழுக்க முழுக்க சுகாதாரத்தை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிவரம் ஆகும். மனித சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் புகையிலையை பயன்படுத்துதல் மற்றும் உடல் எடை அதிகமாக இருத்தல் போன்றவற்றை வைத்தே நாடுகள் வரிசை படுத்தப்பட்டு உள்ளன.
சுற்றுசூழலில் நீர் நிலைகள் பராமரிப்பு மற்றும் துப்புரவு பணி போன்றவையும் அடங்கும். ஐரோப்பிய நாடுகளின் இடையே ஸ்பெயின் நாட்டில் தான் அதிக அளவில் மனித ஆயுட்காலம் நீடிப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் ஐந்து இடங்களை பிடித்த நாடுகள்
1. ஸ்பெயின்
2. இத்தாலி
3. ஐஸ்லாந்து
4. ஜப்பான்
5. சுவிட்சர்லாந்து
அண்டை நாடுகள் இடங்கள்
சீனா   52
இலங்கை   66
வங்காளதேசம்   91
நேபாளம்   110
இந்தியா   120
பாகிஸ்தான்   124
ஆப்கானிஸ்தான்   153

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of