2 பெண்கள் பாலியல் புகார் – கவனாக் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க டொனால்ட் டிரம்ப் உத்தரவு

864

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட கவனாக் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க எப்.பி.ஐ.க்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த அந்தோணி கென்னடி ஓய்வு பெற்றதால் புதிய நீதிபதியாக பிரெட் கவனாக்கை நியமிப்பதாக அதிபர் டிரம்ப் கடந்த ஜூலை மாதம் அறிவித்தார்.

53 வயதான இவரது நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை ஒப்புதல் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, பிரெட் கவனாக் மீது கிறிஸ்டின் பிளாசே போர்டு என்ற பெண்ணும், டெபோரா ரமிரெஸ் என்ற பெண்ணும் பாலியல் புகார்களை எழுப்பியுள்ளனர்.

இதனிடையே நான் எந்தப்பெண்ணுடனும் தவறாக நடந்தது கிடையாது என்று, தன் மீதான பாலியல் புகார்களை கவனாக் மறுத்துள்ளார். இந்த பாலியல் புகார்கள் தொடர்பாக அமெரிக்க மத்திய புலனாய்வு படையான எப்.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சி வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், பிரெட் கவனாக் மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க எப்.பி.ஐ விசாரணைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விசாரணை மிகவும் விரைவாக அதாவது ஒரு வார காலத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement