ஒரு பக்கெட் பிரியாணிக்கு 20 லிட்டர் தண்ணீர்…! – பிரியாணி கடையின் அசத்தல் அறிவிப்பு

879

தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் தண்ணீர் பிரச்சனைக்கு மத்தியில், அரசு தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க, பிரியாணி கடை ஒன்றில், பிரியாணிக்கு இலவசமாக தண்ணீர் கேன் வழங்கி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் மடிப்பாக்கம்,வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் பிரபலமான பிரியாணி கடை தொப்பி வாப்பா பிரியாணி கடை. இந்த கடையில் ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் 20 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் ஒரு பக்கெட் பிரியாணிக்கு 20 லிட்டர் தண்ணீர் கேன் வழங்கி வருவது அங்கு வரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து அந்த கடை உரிமையாளர் உமர் கூறுகையில்; தண்ணீர் இயற்கையின் வளம் அதை விற்பனை பொருளாக மாற்றக்கூடாது. அதுமட்டுமின்றி இலவசமாக தண்ணீர் வழங்குவது என்பது மக்களிடையே தண்ணீர் சிக்கனம், சேமிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் என கூறினார்.

மேலும் அந்த கடைக்கு வரும் வருமானத்தில் 10 % வருமானத்தை பொது சேவைக்காக ஒதுக்கி பல்வேறு உதவிகளை செய்துவருவதாகவும் தெரிவித்தனர்.