2000 ரூபாய் திட்டம் கடன் வாங்கி செயல்படுத்தப்படுகிறது – அரசின் மீது பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

380

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் 2000 ரூபாய் திட்டத்தை தமிழக அரசு கடன் பெற்று செயல்படுத்துவதாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கை குறித்து சட்டப் பேரவையில் அளித்த பதில் உரையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும், நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும் கடந்த ஆண்டு தமிழக அரசின் கணிப்பின்படி அரசின் நிதிப் பற்றாக்குறை 15 ஆயிரம் கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அது இந்த ஆண்டில் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது 18 ஆயிரம் கோடி ஆக காட்டப்பட்டதாகவும், அதன் பின்னர் ஓரிரு தினங்களில் 3000 கோடி அதிகரித்து அது 21000 கோடியாக உயர்ந்தது எனவும் தெரிவித்தார். இவ்வாறு நிதிநிலை அறிக்கையில் நிதி பற்றாக்குறை சரியாக கணிக்கப் படவில்லை எனவும் பல்வேறு தகவல்கள் தமிழக அரசால் மறைக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் அடுத்த ஆண்டு நிதிப்பற்றாக்குறை 15,000 கோடி ஆகத்தான் இருக்கும் என தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள நிலையில் அது எந்த ஆய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது என விளக்கப்படவில்லை என தெரிவித்தார்.

இந்த ஆண்டு 21 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆண்டு நிதிப்பற்றாக்குறையை குறைப்பதற்காக தமிழக அரசு எந்த ஒரு திட்டமும் வைத்திருக்க வில்லை எனவும் தெரிவித்தார்.

தமிழக அரசு அறிவித்துள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை சொத்துக்காக காட்டி உள்ளது எனவும் பணமாக அளிக்கும் திட்டம் எந்த வகையில் சொத்து கணக்கு காட்டப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.

மேலும் அந்தத் திட்டமே கடன் பெற்று செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அரசு கடன் பெறும் போது அதனை முதலீடாக தான் செலவு செய்ய வேண்டும் என சட்டம் இருப்பதாகவும் அவ்வாறு அதனை முதலீடாக செலவு செய்யாமல் பொதுமக்களுக்கு பணமாக வழங்குவதில் எந்த முதலீடும் இல்லை என குற்றம் சாட்டினார். மேலும் தமிழக நிதிநிலை 2016 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of