230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் – ரயில்வே அமைச்சகம்

334

புதிய அறிவிப்பு வரும் வரை பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவை ரத்து நீட்டிக்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. அதேசமயம் மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இது படிப்படியாக ஆகஸ்டு 12ஆம் வரை நீட்டிக்கப்பட்டது.

இருப்பினும் புலம்பெயர் தொழிலாளர்கள் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. பின்னர், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் குறைந்த அளவிலான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஏற்கனவே அறிக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவைக்கான ரத்து காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், புதிய அறிவிப்பு வரும் வரை பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவை ரத்து நீட்டிக்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

அதே சமயம் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் 230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

மும்பையில் மட்டும் தேவைக்கு ஏற்ப உள்ளூர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் 30ஆம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு ரயில்வே அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement