பற்றி எரியும் அமேசான்..! அச்சத்தில் உலக நாடுகள்..! – களமிறங்கிய 44 ஆயிரம் இராணுவ வீரர்கள்..!

908

உலகிற்குத் தேவையான 20 சதவீத ஆக்சிஜனை வெளியிடும், பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த அமேசான் காடுகள் கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவிக்கிடக்கின்றன.

இதில் பெரும் பகுதி அமேசான் காடுகள் பிரேசிலில் உள்ளன. அரிய வகை உயிரினங்கள் வசித்து வரும் இந்த காடுகளில் 19 நாட்களுக்கும் மேலாக கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.


தீயை அணைக்கும் பணியில் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர். காட்டுத் தீ தொடர்வதால், உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 44 ஆயிரம் ராணுவ வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக 700 வீரர்கள் அமேசான் காடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 12 ஆயிரம் லிட்டர் தண்ணீரை கொண்டு செல்லும் திறன் கொண்ட சி-130 ஹெர்குலெஸ் ரகத்தைச் சேர்ந்த இரு விமானங்கள் உள்பட 6 விமானங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், அமேசான் காடுகளை காக்க தாங்கள் முயற்சித்து வருவதாக கூறியுள்ள பழங்குடியின மக்கள் அரசும், பொதுமக்களும் தங்களுக்கு துணைபுரிய வேண்டுமென கோரியுள்ளனர்.

இதே போல, பொலிவியா காடுகளிலும் 18 லட்சம் ஏக்கரில் கடந்த 10 நாட்களாக தீ எரிந்து வருகிறது. இங்கு அமெரிக்க அரசின் உதவியுடன் விமானங்களில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.

அமேசான் காடுகளில் எரியும் தீயை அணைக்க ஒரு மாதம் கூட ஆகலாம் எனக் கூறும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு பேரிழப்பு ஏற்படும் என வருத்தம் தெரிவித்துள்ளனர்.