பிரசவ வலி தாங்க முடியாமல் நடுரோட்டில் அமர்ந்துவிட்டார்” – 6 கி.மீ நடந்துசென்று குழந்தை பெற்ற காஷ்மீர் பெண்..!

1048

ஜம்மு-காஷ்மீரில் நடைமுறையிலிருந்த சிறப்புச் சட்டப்பிரிவு 370, 35A நீக்கப்படுவதற்கு முன்னதாக, அங்கு எந்தக் கலவரமும் ஏற்படக்கூடாது என மாநிலம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

தொலைப்பேசி, இணையம் போன்ற அனைத்துத் தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதன் பிறகே ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்புச் சட்டப்பிரிவு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சட்டம் நீக்கப்பட்டதுக்குக் காஷ்மீரின் ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டதைக் கண்டித்து கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி காஷ்மீர் பகுதியில் பல போராட்டக்காரர்கள் கல் எறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டக்காரர்களை எதிர்த்து பாதுகாப்புப் படையினரும் பெல்லட் குண்டுகளால் தாக்குதல் நடத்தினர். குண்டுகள், போராட்டக்காரர்களின் கண்களைப் பதம் பார்த்ததால் பலர் பார்வையிழந்துள்ளனர். அதே ஆகஸ்ட் 8-ம் தேதி காஷ்மீரில் மற்றொரு கொடுமையான சம்பவமும் நிகழ்ந்துள்ளதாக தி வயர் (The wire) ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீநகரைச் சேர்ந்த 26 வயதுப் பெண் இன்ஷா அஷ்ரஃப். நிறைமாத கர்ப்பிணியான இவருக்குக் காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில் பிரசவ வலி எடுத்துள்ளது. மகளைப் பார்த்துத் துடித்த தாயும், சகோதரியும் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஆட்டோ ஓட்டுநரிடம் உதவி கேட்டுள்ளனர். கர்ப்பிணிக்கு உதவ அவரும் சம்மதித்துள்ளார்.

இதையடுத்து இன்ஷா, அவரது தாய் முபீனா மற்றும் சகோதரி ஆகிய மூன்று பேரும் ஆட்டோவில் ஏறி தங்கள் வீட்டிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள லால் டாட் மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்தனர்.

ஆனால் அவர்கள் புறப்பட்ட அடுத்த 500 மீட்டரில் ஆட்டோ நிறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணியின் நிலை பற்றிப் பாதுகாப்பு வீரர்களுக்கு எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவர்கள் அதை ஏற்க மறுத்து’ இனிமேல் வாகனம் செல்லாது வேண்டுமென்றால் நடந்து செல்லுங்கள்’ எனத் தெரிவித்துள்ளனர். என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்த முபீனா, தன் கர்ப்பிணி மகளை அழைத்துக்கொண்டு 6 கி.மீ நடந்தே மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

“என் நிலைமை பற்றி பாதுகாவலர்களுக்கு எவ்வளவோ எடுத்துக்கூறினோம். ஆனால், அவர்கள் அதைக் கேட்காமல் `எங்களுக்குக் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உங்களை அனுமதிக்க முடியாது’ எனத் தெரிவித்துவிட்டனர். அதிகாலை 5:30 மணிக்கு எனக்கு வலி ஏற்பட்டது.

 

ஆனால் நான் மருத்துவமனையை அடையும் போது மணி பிற்பகல் 11 மணி. நாங்கள் நடந்து செல்லும்போது ஒவ்வொரு 500 மீட்டருக்கும் ஒரு சோதனைச் சாவடிகள் அமைத்து எங்களைச் சோதனை செய்தனர். மேலும் ஒவ்வொரு சாவடிகளிலும் வேறு வேறு பாதைகள் காண்பித்து அந்த வழியாகச் செல்லும் படி கூறினர்” என இன்ஷா அஷ்ரஃப் தெரிவித்துள்ளார்.

இன்ஷா செல்ல வேண்டிய மருத்துவமனைக்கு 500 மீட்டர் முன்னதாகவே அவருக்குத் தாங்கமுடியாத வலி ஏற்பட்டு சாலையிலேயே அமர்ந்துள்ளார். பின்னர் அருகிலிருந்த வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு இன்ஷாவுக்கு நல்லபடியாகப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

பின்னர் அவர் லால் டாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இன்ஷாவின் குழந்தைக்குத் துணிகூட வாங்கமுடியாமல் சிரமப்பட்டுள்ளனர்.

”ஸ்ரீநகர் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் என் பேத்திக்குத் துணிகூட வாங்கமுடியவில்லை. குழந்தையைக் கையில் எடுத்து என் தாவணியால் குழந்தையைச் சுற்றிவைத்தேன். பின்னர் என் மற்றொரு மகள் நீண்ட நேரமாக அலைந்து திரிந்து குழந்தைக்கான துணியை வாங்கிவந்தாள்” என்று இன்ஷாவின் தாய் முபீனா கூறியுள்ளார்.

காஷ்மீரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் குழந்தை பிறந்த விஷயம் அவரது தந்தைக்குத் தெரிவிக்கமுடியாமலும் குடும்பத்தினர் தவித்துள்ளனர். காஷ்மீரில் நடந்த வரலாற்று நிகழ்வுக்கு நடுவே இன்ஷாவின் குழந்தை பிறந்துள்ளது.

அதே லால் டாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்து அவர் டிஸ்சார்ஜும் செய்யப்பட்டுள்ளார். ஆனால் தடை உத்தரவால் அவர்களால் வெளியேற முடியாமல் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கியுள்ளனர்.

‘தடை உத்தரவின் போது என்ன செய்ய வேண்டும், எப்படிச் செயல்பட வேண்டும் போன்ற எந்த அறிவிப்புகளும் எங்களுக்கு வரவில்லை’ என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பல நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனையை விட்டு வெளியே செல்ல முடியாமலும், மருத்துவமனையில் தூங்குவதற்கும், உண்ண உணவும் இல்லாமலும் தவித்து வருகின்றனர். சிலர் மருத்துவமனை வளாகத்திலேயே தூங்கியுள்ளனர்.