நிற்காமல் சென்ற பைக் மீது லத்தியை வீசிய போலீஸ்..! – தாயை பறிகொடுத்த மகன்..!

492

சுமை தூக்கும் தொழிலாளி செந்தில். இவர் தனது தாய் அய்யம்மாளுடன் பயணித்துக்கொண்டிருந்த பொழுது காவலர்கள் கள்ளக்குறிச்சியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது, செந்திலின் வாகனத்தை நிறுத்துமாறு கைகாட்டியுள்ளனர். ஆனால், தலைக்கவசம் அணியாத காரணத்தால் அபராதம் விதிப்பார்கள் என எண்ணி வாகனத்தை நிறுத்தாமல் இயக்கி உள்ளார். இதனால் அங்கிருந்த காவலர்களில் ஒருவர் செந்தில் மீது லத்தியை வீசினார். அது எதிர்பாராத விதமாக பின்னால் அமர்ந்திருந்த செந்திலின் தாயார் மீது விழுந்து அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயமுற்ற அவரை மீட்டு பொதுமக்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலிலேயே அவர் உயிரிழந்ததால் காவலர் சந்தோஷ் தாக்கியதால்தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது என கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி, புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என கூறியுள்ளார். ‘புகார் கொடுத்தால் செத்துப்போன என் அம்மாவை உயிரோடு திருப்பி கொடுப்பீங்களா’ என செந்தில் கேட்டது அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இதையடுத்து கள்ளக்குறிச்சி பயிற்சி ஆய்வாளர் வேல்முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர் மணி, தலைமைக் காவலர்கள் சந்தோஷ், இளையராஜா, செல்வம் ஆகிய 5 காவலர்களும்  ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டனர்.

கைகாட்டியும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றது தவறாக இருப்பினும் அதை ஒரு பெரிய தேசத்துரோகம் போன்று காவலர்கள் அவர்களை லத்தியால் தாக்கி இப்படி உயிரிழப்பை ஏற்படுத்தியது வேதனைக்குறியது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of