செம்மரம் வெட்ட வந்த லாரியை போலீசார் விரட்டியதால் லாரியில் இருந்து குதித்த 7 பேர் படுகாயம்.

563

திருப்பதியில் செம்மரம் வெட்ட வந்த லாரியை போலீசார் விரட்டியதால், லாரியில் இருந்து குதித்த தமிழகத்தை சேர்ந்த 7 கூலித் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியில் உள்ள செம்மரக் கடத்தல் தடுப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புத்தூர் சோதனை சாவடி அருகே செம்மரம் வெட்டுவதற்காக லாரியில் 80க்கும் மேற்பட்டோர் வருவதை அறிந்த போலீசார் அந்த லாரியை நிறுத்த முயன்றனர்.

இதை அறிந்த கடத்தல்காரர்கள் லாரியை நிறுத்தாமல் திருப்பதியை நோக்கி வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து காஜுலமண்டியம் என்ற இடத்தில் போடப்பட்டிருந்த தடுப்பு வேலியை உடைத்துவிட்டு சந்திரகிரி நோக்கி சென்றனர். இதையடுத்து திருச்சானூர் போலீசார் மற்றொரு லாரியை சாலையில் குறுக்கே நிறுத்தினர்.

இதனை எதிர்பார்க்காத கடத்தல்காரர்கள் லாரியை வேகமாக நிறுத்தி விட்டு தப்பி ஓட முயன்றனர். அப்போது, லாரியிலிருந்து குதித்ததில் ஏழு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காயமடைந்தவர்களில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா ஜவ்வாதுமலை கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து செம்மரக்கடத்தல் தடுப்புப் அதிரடிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிஓடியவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.