“30 ஆயிரத்துக்கு” ஏலம் போன எலுமிச்சை

117
lemon7.3.19

ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த விளக்கேத்தி அருகே புதுஅண்ணாமலை பாளையம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மகாசிவராத்திரி பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு மகா சிவராத்திரி பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலை மறுபூஜைகள் நடத்தப்பட்டது. பூஜைகள் நிறைவடைந்த பின்னர், பூஜையில் சாமியின் பாதத்தில்வைக்கப்பட்ட ஒரே ஒரு எலுமிச்சைப் பழம், மறு பூஜை தினமான நேற்றிரவு ஏலம் விடப்பட்டது.

2 ரூபாயில் ஆரம்பித்த ஏல தொகையை சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் போட்டி போட்டு விலையை உயர்த்தி கேட்டனர். ஆயிரங்களை தாண்டி சென்ற ஏலத்தில், ஒரு எலுமிச்சம் பழம் 30 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது. ஈரோடு 46 புதூரை சேர்ந்த சக்திவேல் என்பவர் எலுமிச்சை பழத்தை ஏலத்தில் வாங்கி சென்றார்.

இந்த எலுமிச்சை பழத்தை வீட்டில் வைத்து பூஜித்தால் நன்மை நடக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக போட்டி போட்டு வாங்கி செல்வதாக பக்தர்கள் கூறினர். இந்த ஆண்டு ஏலத்தில் பெற்ற எலுமிச்சை பழத்திற்கான தொகையை அடுத்த ஆண்டு மகாசிவராத்திரியின் போது செலுத்தினால் போதும்.