“6 பைக்.. 1 சொகுசு கார்..” இன்னொரு பைக் கேட்ட மகன்..! வாங்கித்தராததால் எடுத்த விபரீத முடிவு..!

46859

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அன்ட் பகுதியை சேர்ந்தவர் அஜிகுமார். இவருக்கு லேகா என்ற மனைவியும், அகிலேஷ் மற்றும் அகிலா என்ற இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் அகிலேஷ் தனது அறையில் இருந்து நீண்ட நேரமாக வெளியே வராததால், பெற்றோர் சன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளனர்.

அப்போது, தூக்கில் தொங்கிய நிலையில், அகிலேஷ் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து அகிலேஷின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

அதில், அகிலேஷ் தனது தந்தையிடம், ரூ.14 லட்சம் மதிப்பிலான ஹார்லி -டேவிட்சன் என்ற பைக்கை வாங்கித் தருமாறு கேட்டதாகவும், ஏற்கனவே 6 பைக்குகளும், 1 சொகுசு காரும் இருப்பதால், தந்தை அஜி குமார் வாங்கித் தர மறுத்தாகவும் தெரியவந்தது.

இதனால் தந்தையிடம் சில நாட்களாக பேசாமல் இருந்த அகிலேஷ், இனி அந்த பைக் கிடைக்கவே கிடைக்காது என்ற முடிவுக்கு வந்த நிலையில் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீசார் தொடர்ந்து அகிலேஷின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசைப்பட்ட பொருள்களையெல்லாம் கேட்ட உடனே வாங்கித்தரும் பெற்றோர்களால், குழந்தைகளின் நிலை என்ன ஆகும் என்பதற்கு இந்த சம்பவமே சான்று ஆகும்.