மோடியை எச்சரித்த நபர்! ரத்தத்தில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்!

831

ஜார்க்கண்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, ராஜீவ் காந்திதான் ஊழலில் நம்பர் ஒன்று என போபர்ஸ் ஊழலை குறிப்பிட்டு பேசினார். இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.

இந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், மோடியின் பேச்சில் விதிமீறல் இல்லை என புகாரை நிராகரித்தது. இதனிடையே அமேதியை சேர்ந்த மனோஜ் காஷ்யப் என்ற இளைஞர், பிரதமர் மோடி ராஜீவ் காந்தி குறித்து பேசியதை கண்டித்து தேர்தல் ஆணையத்திற்கு தனது ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடியின் பேச்சு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ராஜீவ் காந்திதான் வாக்குரிமைக்கான வயதை 18ஆக குறைத்து உத்தரவிட்டார். நாட்டில் பஞ்சாயத்து ராஜ் முறையை கொண்டு வந்தார், கணினி புரட்சியை நம் தேசத்தில் ஏற்படுத்தியவரும் அவரே.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயே தன் கட்டுரை ஒன்றில் ராஜீவ் காந்தியை பாராட்டி உள்ளார். அமேதி மக்கள், ராஜீவ் காந்தியை அவமரியாதை செய்தவர்களை, அவரை கொன்றவர்களை போல் சமமாக பார்க்கிறார்கள். ராஜீவ் காந்தி அமேதி மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து வருகிறார்.

மறைந்த எங்கள் தலைவர் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு அறிவுரை சொல்லுங்கள். இந்தக் கடிதத்தை அரசியலுக்காக நான் எழுதவில்லை. மறைந்த எங்கள் தலைவர் மீதுள்ள பாசத்தினால் எழுதி உள்ளேன் இவ்வாறு கூறியுள்ளார். இதனிடையே இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.