சமூக வலைதளங்களுக்கு ஆதார் கட்டாயம்..? நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்..!

297

நாளுக்கு நாள் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சைபர் குற்றங்களை செய்பவர்கள், இணையதளத்திற்கு பின்னால் ஒளிந்துக்கொள்கின்றனர்.

இதனால் அவர்களை பிடிப்பது அரிதான காரியமாக மாறி விடுகிறது. இந்த குற்றங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதைப்போன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், சமூக வலைதளங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று ஃபேஸ்புக் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில், ஃபேஸ்புக் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இதை ஃபேஸ்புக் தரப்பு நிராகரித்தது.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஃபேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் மொத்தமாக விசாரிக்கும். இவ்வழக்கில் மத்திய அரசு, கூகுள், ட்விட்டர் மற்றும் யூ டியூப் நிறுவனங்கள் செப்டம்பர் 13-ந் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.