நீட் தேர்வு : “கொள்கையின் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது” – அமைச்சர் தங்கமணி

333

நீட் தேர்வு வேண்டாம் என்ற அதிமுக அரசின் கொள்கை அடிப்படையிலேயே, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.


நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட, உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் அதிமுக வாக்குகளைப் பெற்றுள்ளது.

வெற்றி பெற்ற அதிமுகவினர் பதவியேற்கக் கூடாது என திமுக நீதிமன்றத்தை நாடினாலும் கவலையில்லை. மக்கள் நலனுக்கான பணிகளை எப்போதும் அதிமுகவினர் செய்வர்.

கொங்கு மண்டலத்தில் மட்டும் தான் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என்பது தவறான கருத்து. அரசு அதிகாரிகள் அதிமுகவுக்கு ஆதரவாக இருந்தார்கள் எனக் குற்றம்சாட்டினால், திமுக இவ்வளவு இடங்களில் எவ்வாறு வெற்றி பெற்றிருக்க முடியும்?. அதிமுகவுக்கு எதிராக அவர்கள் வழக்கு தொடர்ந்தாலும், மக்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என்பது நன்றாகவே தெரியும்.

வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். நீட் தேர்வைப் பொருத்தவரை, தமிழகத்துக்கு வேண்டாம் என்பதுதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கருத்தாகும்.

அதிமுகவின் கொள்கையும் அதுதான். நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிப்படையக் கூடாது. அதனடிப்படையிலேயே, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தீர்ப்பு எவ்வாறு வந்தாலும், அதனை ஏற்றுக் கொள்வோம் என்றார்.

Advertisement