பொது நிவாரணத்திற்கு ரூ. 5 கோடி நிதி வழங்கிய அதிமுக MLA-க்கள்..!

319

கோவை மாவட்டத்தைச் சோந்த அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து முதல்வா் பொது நிவாரணத்துக்கு ரூ.5 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ரூ.பல கோடி நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டு வருகின்றன. பல தன்னாா்வ அமைப்புகள், தொழில் நிறுவனங்களும் நிதிகளை அளித்து வருகின்றன.

தவிர மக்களவை உறுப்பினா்களும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளனா். இந்நிலையில் தமிழக முதல்வா் பொது நிவாரண நிதிக்கு கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூா், பொள்ளாச்சி, வால்பாறை, கோவை (தெற்கு), கோவை (வடக்கு), மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூா், கிணத்துக்கடவு ஆகிய சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 9 சட்டப் பேரவை உறுப்பினா்களும் மொத்தமாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனா்.

இதற்கான ஆணையினை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி ஆட்சியா் கு.ராசாமணியிடம் சனிக்கிழமை வழங்கினாா். உடன் சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பி.ஆா்.ஜி.அருண்குமாா், ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுகுட்டி, அம்மன் கே.அா்ச்சுணன், எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, வி.பி.கந்தசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

மேலும் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு 2 ஆயிரம் பாதுகாப்பு கவசங்கள்,

5 ஆயிரம் ரப்பா் கையுறைகள், 7 ஆயிரம் முகக் கவசங்கள், 100 லிட்டா் கிருமி நாசினி, கைகளை தூய்மைப் படுத்திக்கொள்ளும் கிருமி நாசினி 1000 பாட்டில்கள் என ரூ.22 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான பொருள்களையும் வழங்கினா்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of