அமைச்சர்களுக்கு வாய்ப்பூட்டு – அதிமுக கூட்டறிக்கை வெளியீடு

340

அதிமுக – வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் – இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து  வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,  ஒரு குடும்பத்தின் பிடியிலோ, ஒரு குறிப்பிட்ட குழுவின் கைகளிலோ, வலிமை பெற்றவர்களின் கரங்களிலோ இந்த மக்களாட்சி முடங்கிவிடக்கூடாது  என்பதற்காகத்தான் அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கம் தோன்றியது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக அதிமுக-வையும், ஆட்சியையும் மாற்றாரும் பாராட்டும் வண்ணம் நடத்தியதைப்போல, இனிவரும் காலங்களிலும் சிறப்பாக நடத்த ஒன்றுபட்டு உழைக்கவேண்டியது நேரம் இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சிலநாட்களாக எந்தவித பின்னணியும் இன்றி சிலர் கூறிய கருத்துகள் மாற்றாருக்கு பெரும் விவாதப்பொருளாக மாறிவிட்டதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தகைய நிலை தொடராவண்ணம் ராணுவக்கட்டுப்பாட்டுடன் தலைமையில் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படவேண்டும் என்றும் கூட்டறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அதிமுக-வின் அனைத்து நிலைகளிலும் செயல்பட்டுவரும் பொறுப்பாளர்கள் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் ஊடகங்களில் தனி்ப்பட்ட கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். கூட்டறி்க்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement