கொங்கு மாவட்டங்களும், வடமாவட்டங்களும்.., கூட்டணிக் கணக்குகள் வியூகம் வெல்லுமா?

900

இந்தியா முழுவதும் நடக்க இருக்கின்ற 17-வது மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக கட்சிகள் ஒன்றோடு ஒன்று கூட்டணி வைத்துள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியை நடத்தி வருகின்றன. அதில் ஒன்று திமுக மற்றொன்று திமுகவில் இருந்து பிரிந்து எம்ஜிஆர்-ரால் உருவாக்கப்பட்ட அதிமுக. இவ்விரு கட்சிகளும் தான் 50 ஆண்டுகாலமாக தமிழகத்தை ஆண்டு வருகின்றன.

இவ்விரு கட்சிகளை தாண்டி தமிழகத்தில் எந்த ஒரு தேசிய கட்சியாலும் காலூன்றி நிற்கமுடியாத நிலையில் உள்ளது. இருப்பினும் இவ்விரு கட்சிகளுக்கும் தமிழகத்தில் பல இடங்கள் சாதகமாகவும், பல இடங்கள் சாதகமற்றும் உள்ளன.

இவ்விரு கட்சிகளும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை பங்கீடுவதில் அவர்கள் செய்யும் வியூகங்கள் இதோ..,

மக்களவைத் தோ்தலில், திமுக கொங்கு மாவட்டங்களில் அதிக அளவில் போட்டியிடாமலும், அதிமுக வட மாவட்டங்களில் அதிக அளவில் போட்டியிடாமலும் தவிர்த்துள்ளன.

அதிமுக – திமுக 11 இடங்களில் நேரடிப் போட்டி

17-ஆவது மக்களவைத் தோ்தலின் முதன்மைப் போட்டியாளா்களாக அதிமுகவும் திமுகவும் கருதப்படுகின்றன. இவர்களுக்கிடையே 8 தொகுதிகளில் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. அதில், முதல்வரின் சொந்தத் தொகுதியான சேலம் உள்பட பொள்ளாச்சி, திருவண்ணாமலை, நீலகிரி (தனி), திருநெல்வேலி, மயிலாடுதுறைற, காஞ்சிபுரம் (தனி), சென்னை தெற்கு ஆகிய 8 தொகுதிகள் உள்ளன.

மேலும், திமுகவின் கூட்டணிக் கட்சிகளான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியிலும், இந்திய ஜனநாயகக் கட்சி பெரம்பலூா் தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.அதைப்போல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதற்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளில் விழுப்புரம் (தனி) தொகுதியில் மட்டும் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடுகிறது. இந்த 3 கட்சிகளின் தொகுதிகளையும் சேர்த்து அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே 11 தொகுதிகளில் நேரடிப் போட்டி உருவாகியுள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக மட்டும், எந்தச் சின்னத்தில் போட்டியிடுகிறது என்ற அறிவிப்பை வெளியிடவில்லை. ஒருவேளை, மதிமுகவும் உதயசூரியன் சின்னத்தில் தேர்தலைச் சந்தித்தால் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே 12 தொகுதிகளில் நேரடிப் போட்டிக்கான வாய்ப்பு ஏற்படும்.

கொங்கு மாவட்டங்களை கண்டு அஞ்சும் திமுக

தேர்தலில் கொங்கு மாவட்டங்கள் திமுகவுக்கு எப்போதும் பெரிய அளவில் கைகொடுப்பதில்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், கொங்கு மாவட்டத் தொகுதிகளில் அடைந்த தோல்வியால், திமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்தப் பயத்தின் காரணமாகவே கொங்கு மாவட்டங்களில் உள்ள தொகுதிகளைப் பெரும்பாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக ஒதுக்கிவிட்டு, தங்களுக்குச் சாதகமாக உள்ள வடமாவட்டங்களில் அதிக இடங்களில் போட்டியிடுகிறது.இருப்பினும், கொங்கு மாவட்டத்தில் பொள்ளாச்சி தொகுதியில் மட்டும் திமுக போட்டியிட முன்வந்துள்ளது. ஏன்னென்றால், சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் இளம் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமை சம்பவ பிரச்னை தான் காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

இந்த பிரச்சனை தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், இதனை வைத்து அந்தத் தொகுதியை தங்களுக்குச் சாதகமாக மாறலாம் என்ற நம்பிக்கையில் அந்தத் தொகுதியில் நிற்கிறது.

வட மாவட்டங்களை கண்டு அதிரும் அதிமுக

கடந்த சட்டப்பேரவை தோதலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தாலும், வடமாவட்டங்களில் அதிமுகவால் வெற்றிபெற முடியவில்லை. அதன் காரணமாகவே, இந்த முறை வடமாவட்டங்களில் உள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கிவிட்டு கரூா், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், பொள்ளாச்சி உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் அதிமுக அதிக கவனம் செலுத்துகிறது.

அதிமுகவின் கோட்டையான திண்டுக்கல் கைவிடப்பட்டதன் காரணம் என்ன?

என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தற்போது சூறாவளியாக பரவி வருகிறது. எம்ஜிஆா் கட்சி தொடங்கி சந்தித்த முதல் மக்களவை இடைத்தேர்தல் (1977) திண்டுக்கல் ஆகும்.

இங்கு, அதிமுகவின் சார்பில் முதன் முதலில் மாயத்தேவா் வேட்பாளராக நின்று வெற்றிபெற்றார். அதன்பிறகு, 1980-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திண்டுகல்லில் திமுக வெற்றிபெற்றது. இருபினும் அதன் பின் நடத்தப்பட்ட அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி முகம் சூடியது.ஆனால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குள் வரும் சட்டப்பேரவைத் தொகுதிகளான திண்டுக்கல் தவிர்த்து ஆத்தூா், நத்தம், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது. இதன், காரணமாகவே தற்போது திண்டுக்கல் தொகுதியை லாவகமாக பாமகவுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது என்று கூறப்படுகின்றது.

அதைப்போல அதிமுக சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில், தென்சென்னையை மட்டும் தன்வசம் வைத்துக் கொண்டு, மத்திய சென்னையை பாமகவுக்கும் வடசென்னையைத் தேமுதிகவுக்கும் தள்ளிவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கூட்டணி கணக்குகள் மாற்றம் பெற்றாலும் வெற்றியை தீர்மாணிப்பது மக்களே.

-கள்ளப்புலி பாபு

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of