எதுக்கும் ரெடியா இருங்க.. அரியர் மாணவர்களுக்கு கலக்கத்தை தரும் செய்தி..

1108

அரியர் மாணவர்கள் ஆல்பாஸ் என்ற தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், தேர்வு நடத்தி மாணவர்களை மதிப்பீடு செய்யாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் அரசாணை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும விதிகளுக்கு முரணானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும் என்றும், மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாண்டு மாணவர்களின் அரியர் பாடங்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள் அறிவித்துள்ளதாகவும், இந்த விதிகளை பின்பற்றும்படி அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது. இதனை அறிந்த அரியர் மாணவர்கள் சற்று கலக்கத்தில் தான் உள்ளனர்.