கலிபோர்னியா பல்கலைக்கழகம் பகீர் ரிப்போர்ட் ! 84 நகரங்களுக்கு ஆபத்து வர வாய்ப்பு…

194

கலிபோர்னியா: பருவ நிலை மாற்றத்தால் காற்று மாசுபாடு உலகம் முழுவதும் அதிகரித்துவிட்டதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர்கள் பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஆராய்ச்சி நடத்தினார்கள்.

இந்த ஆய்வின் முடிவுகள் பருவ நிலை மாறுபாடு குறித்த இதழில் (journal Nature Climate Change) வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

மனிதர்கள் ஏற்படுத்தும் மாசு தூசு, துகள்களாக காற்றில் கலந்து பனிப்புகை ஏற்படுத்துகிறது. இதனால், மனிதர்கள் மற்றும் விலங்குகள் மட்டுமின்றி காடுகளும் பாதிப்படைந்து வருகிறது. கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளியேற்றம் அதிகரிப்பால் கடல் பகுதியைவிட நிலப்பகுதியின் வெப்பம் அதிகரிக்கிறது.நிலப்பகுதி அதிகப்படியான வெப்பம் அடையும் நிகழ்வு என்பது காற்றழுத்தத்துடன் தொடர்புடையதாகும். காற்றழுத்தம் மாறும் காரணங்களால் மேகங்கள் உருவாவது குறைந்து போகிறது. இதனால் மழையும் பல இடங்களில் குறைந்துவிடுகிறது.

இந்த பருவ நிலை மாற்றத்தால் விவசாயம் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் விவசாயம் பொய்த்ததன் காரணமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஆசியா, ஆப்பிரிக்காவிலுள்ள 95 சதவீத நகரங்கள் மோசமான பருவநிலை சார்ந்த அபாயங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் 100 நகரங்களில் 84 நகரங்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது இருக்கும் காற்று மாசுக்களின் அளவை குறைக்கவில்லை என்றால் வரும் 2050-ம் ஆண்டில் கோடைக் காலத்திலேயே ஆர்டிக் கடல் பகுதியிலுள்ள பனிக்கட்டிகள் முழுவதுமாக உருகிவிடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்,