மாஸ்டர் படத்திற்கு வாழ்த்து போஸ்டர் அடித்து மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்..!

5137

மதுரையில் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

விழாவில் பேசிய நடிகர் விஜய், தனது உடை வடிமைப்பாளர் அறிவுறுத்தலின் படி கோட்-சூட் அணிந்து வந்ததாக தெரிவித்தார். அத்துடன் தனது நண்பர் அஜித் போல அணிந்து வரலாம் என நினைத்து வந்ததாகவும் குறிப்பிட்டார். அத்துடன் தனக்கு இந்த உடை சரியாக பொருந்துகிறதா ? எனவும் ரசிகர்களிடம் மேடையில் இருந்து கேள்வியை எழுப்பினார்.

இந்த விவகாரத்தின் எதிரொலியாக சமூக வலைத்தளங்களில் விஜய் – அஜித் ரசிகர்களிடையே கமெண்ட் மோதல் ஏற்பட்டது. அது ட்ரெண்டிங்களை உருவாக்கியது. இருதரப்பு ரசிகர்களும் கமெண்டுகளை பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு வார்த்தை போரில் ஈடுபட்டனர். இதற்கிடையே நண்பர் விஜய், நண்பர் அஜித் உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டாகியிருந்தன.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் பேச்சினை வரவேற்கும் விதமாக மதுரையில் அஜித் ரசிகர்கள் ‘தல-தளபதி’ தமிழ் சினிமாவின் மகுடங்கள் என போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அத்துடன் தனது சக போட்டியாளரை நண்பராக மதிக்கும் மாண்பு விஜய் ரசிகர்களிடமும் இருந்தால் எத்தனை அழகாய் இருக்கும் என்ற வாசகங்களை குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஏப்ரல் 9ஆம் தேதி வெளிவரவுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதற்கு மதுரை விஜய் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.