விபத்தில் காயமடைந்த பெண்ணிடம் ஆம்புலன்ஸ் ஊழியரின் மோசமான செயல்..! உறவினர்கள் தர்ம அடி..!

605

திருவள்ளூரை அடுத்த வெங்கல் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரும், அவரது உறவினர்கள் லாவண்யா மற்றும் சரண்யா ஆகியோரும் பைக்கில் வெளியே சென்றுள்ளனர். தாமரைப்பாக்கம் பகுதி அருகே வந்துக்கொண்டிருந்த போது, எதிரே வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், 3 பேரும் படுகாயமடைந்தனர். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜன் உயிரிழந்தார். லாவண்யாவும் சரண்யாவும் மயக்கநிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மயக்கம் தெளிந்த லாண்வயா, கழுத்தில் தங்கச் செயின் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து சரண்யாவிடம் கேட்டுள்ளார். அப்போது சரண்யா, ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர்தான் செயினையும் கொலுசையும் கழற்றினார் என்று கூறினார். இதனையடுத்து, சரண்யா தெரிவித்த தகவலின்படி, ராஜனின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் உதவியாளர் அருண்குமாரைப் பிடித்து ஒரு அறையில் அடைத்து வைத்து அடித்து விசாரித்தனர்.

அப்போது ஜெயின் திருடியதை அவர் ஒப்புக்கொண்டு, ஜெயினை திரும்பக் கொடுத்துள்ளார். ராஜனின் உறவினர்கள் வழக்கு எதுவும் கொடுக்காததால், காவல்நிலையத்திற்கு சென்று எழுதி மட்டும் கொடுத்துவிட்டு அங்கிருந்து அருண்குமார் சென்றுள்ளார்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம், ஆம்புலன்ஸ் ஊழியரே திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை நிர்வாகமும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பியும் விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of