அமெரிக்கா – சீனா இடையே நிலவும் வர்த்தக போர்

548

அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இன்று சந்தித்து பேச உள்ளனர்.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே சமீபத்தில் வர்த்தக போர் தொடங்கியது.

சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிபர் டிரம்ப் வரியை பலமடங்கு உயர்த்தினார். பதிலுக்கு சீனாவும், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை உயர்த்தியது.

கடந்த மாதமும் அமெரிக்கா 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீன பொருட்களுக்கு வரியை உயர்த்தியது. இவ்வாறு இரு நாடுகளும் வரியை உயர்த்துவதால் வர்த்தக போர் உச்சம் அடைந்துள்ளது.

இதற்கிடையே, சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியில் ரோந்து வந்த அமெரிக்க போர் கப்பலை மோதுவது போல் வந்த சீன போர் கப்பல், எச்சரிக்கை செய்து விரட்டி அடித்தது.

அதே நேரத்தில் ரஷ்யாவுடன் ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொண்ட சீன ராணுவ நிறுவனத்திற்கு அமெரிக்கா சில தடைகளை விதித்தது.

இது மட்டுமின்றி, வர்த்தக போருக்கு அதிபர் டிரம்ப்பே முக்கிய காரணம் என சீனா நேரடியாகவே குற்றம்சாட்டி உள்ளது.

பதிலுக்கு அமெரிக்கா, தனது உள்நாட்டு விவகாரங்களிலும் கொள்கைகளிலும் சீனா தலையிடுவதாக கூறி உள்ளது.

இப்படிப்பட்ட பதற்றமான சூழலில், அமெரிக்கா – சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை சீன தலைநகர் பீஜிங்கில் இன்று நடைபெறுகிறது.

இதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ பீஜிங் வந்துள்ளார். அவருடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜிம் மேட்டிசும் வருவதாக கூறப்பட்டிருந்த நிலையில், அவரது பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

தென் சீன கடல் விவகாரத்தை தொடர்ந்து ஜிம் மேட்டிசின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே, வடகொரியா அதிபர் கிம்மை விரைவில் சந்தித்து பேசவும் பாம்பியோ ஒப்புதல் அளித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of