அமெரிக்க  தேர்தல் – தமிழில் பிரச்சாரம் செய்ய திட்டம்

707

அமெரிக்க அதிபர் தேர்தலில் இம்முறை, இந்தியர்களின் வாக்குகளை வாங்குவதற்காக, தமிழ் உள்ளிட்ட 14 இந்திய மொழிகளில் பரப்புரை செய்வதற்கு, அந்நாட்டின் இரு பெரும் கட்சிகளும் தீர்மானித்துள்ளன.

வரும் நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை ஒத்தி வைக்க, தற்போதைய அதிபர் டிரம்ப் முயற்சித்தாலும், அதற்கு சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடேன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள 30 லட்சம் இந்திய வாக்காளர்களின் வாக்குகளை கவர்வதற்காக, இம்முறை முழுவீச்சில் தமிழ், பஞ்சாபி, பெங்காலி, இந்தி உள்ளி்ட்ட 14 இந்திய மொழிகளில் பேசுவதற்கு இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.

அதிலும், ஜோ பிடேன் தரப்பினர், தமிழ், இந்தி, பஞ்சாபி மொழிகளில் பல்வேறு தேர்தல் வாசகங்களைத் தயாரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்முறை ஆங்கிலத்தில் மட்டுமல்ல, தமிழ் உள்ளி்ட்ட பல மொழிகளில் அமெரிக்காவில் தேர்தல் பரப்புரை, அடுத்த மாதம் முதல் களைக் கட்டும் என்று எதிர்பார்க்கலாம்.