அமித்ஷா இன்று தமிழகம் வருகை

482

பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அக்கட்சியின் தலைவர் அமித்ஷா இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழகம் வருகிறார்.காலை 9.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் அவர் பகல் 12.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் உள்ள சங்கராபேரி மைதானத்துக்கு மதியம் 1.05 மணிக்கு வருகிறார்.

இதன் பின்னர் கார் மூலம், இந்த மைதானத்துக்கு அருகே நடக்க உள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு மதியம் 1.10 மணிக்கு வந்தடைகிறார். அங்கு, தூத்துக்குடி பாராமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து அவர் பேசுகிறார்.

பின்னர், மதியம் 2.10 மணிக்கு சங்கராபேரியில் இருந்து புறப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் மதியம் 2.40 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த அரிமலம் லேனா விலக்கு பகுதியை வந்தடைகிறார்.

பின்னர் அங்கு நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிவகங்கை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து பேசுகிறார்.

பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் 4 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 4.10 மணிக்கு மதுரை விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கிருந்து விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார்.

இதன்பின்னர் கார் மூலம் பொதுக்கூட்டம் நடக்க உள்ள கோவை சிவானந்தா காலனி பகுதிக்கு மாலை 5.10 மணிக்கு வந்து சேருகிறார். அங்கு நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கோவை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

மாலை 6.15 மணிக்கு பிரசாரத்தை முடித்துக்கொள்ளும் அவர், அங்கிருந்து கார் மூலம் கோவை விமான நிலையம் வந்து பெங்களூரு புறப்பட்டு செல்கிறார்.

Advertisement