தருமபுரி மக்களுக்கு ஓர் அறிவிப்பு.. எச்சரிக்கையா இருங்கள் – மாவட்ட நிர்வாகம்

1013

கர்நாடகா மாநில அணைகளில் திறக்கப்படும் உபரிநீர் அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரிக் கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகா  பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் இரு அணைகளின் பாதுகாப்புக் கருதி, அணைகளுக்கு வரும் நீரின் அளவுக்கு ஏற்ப தமிழகத்திற்கு  வெளியேற்றப்படும் உபரி நீர்திறப்பு என்பது அதிகரித்துள்ளது.

நேற்று   கபினி அணையில் இருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 15,000  கன அடி அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதற்கிடையில் தமிழகத்தை நோக்கி காவிரி ஆறு பயணிக்கும் வழிநெடுக நீர்பிடிப்புப் பகுதியில் சில நாட்களாக மழையும் பெய்து வருகிறது. இதனால், அணை திறப்பு மற்றும் மழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

அதன்படி  இரவு முதலே பென்னாகரம் வட்டாட்சியர் சேதுலிங்கம் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் செந்தில் குமார் ஒகேனக்கல், ஊட்டமலை, நாடார் கொட்டாய் உள்ளிட்ட காவிரிக் கரையோர பகுதிகளில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.