தமிழகத்திற்கு எதிராகிய கன்னட அமைப்புகள்..! மைசூர் பாக்கால் போராட்டம்..! இறுதியில் தெரிய வந்த மர்மம்..!

731

சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும் இனிப்பு வகைகளில் மைசூர் பாக்கும் ஒன்று. இந்த மைசூர் பாக்கு குறித்து டுவிட்டரில் போடப்பட்ட கருத்து ஒன்று, கன்னட அமைப்புகளை போராட்டம் நடத்தக்கூடிய அளவிற்கு தள்ளியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா.

ஆம், ஒருத்தர் போட்ட சின்ன டுவீட் ஒட்டு மொத்த கன்னட டிவி சேனல்களை அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால், அவர் போட்டது ஒரு காமெடியான டுவீட் தான்.

அறிவியலாளரும், எழுத்தாளருமான ஆனந்த் ரங்கநாதன் அவரது டுவிட்டர் பக்கத்தில், நிர்மலா சீதாராமனுக்கு மைசூர் பாக்கு கொடுப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தை போட்டுள்ளார்.

அதன் கீழே, மைசூர்பாக்கிற்கு புவிசார் குறியீடு அந்தஸ்த்தை தமிழகத்திற்கு வழங்கியதற்காக நான் நிர்மலா சீதாராமனை பாராட்டினேன் என்று டுவீட் செய்திருந்தார் ஆனந்த்.

இதனைப்பார்த்த கன்னட டிவி சேனல்கள், பெரிச்சாலிக்கு பெரிய கருவாடு கிடைத்ததைப் போன்று, அதைப்பற்றி பரபரப்பாக பேசத் தொடங்கி விட்டனர். சிலர் தங்களது டிவி சேனல்களில் விவாத நிகழ்ச்சியெல்லாம் நடத்தியது தான், இருப்பதிலேயே காமெடி.

இதையடுத்து கன்னட அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக கூறப்பட்டது. விஷயம் எல்லை மீறிப் போனதை உணர்ந்த ஆனந்த், நான் கேலியாக போட்ட ஒரு ட்வீட்டை வைத்து இவ்வளவு தூரம் போய்விட்டீர்களா, அப்படியெல்லாம் எந்த புவிசார் குறியீடும் தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

இந்த தகவலை அறிந்ததும், கன்னட மீடியாக்களுக்கும், போராட்டத்தில் குதிக்க இருந்த கன்னட அமைப்புகளுக்கும் பெரிய பல்பு தான் மிஞ்சியது.