ஆந்திராவில் எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை – ஆதரவாளர்கள் காவல் நிலையத்திற்கு தீ வைப்பு

493

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ.வை, மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன்றதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் காவல் நிலையத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டணம் மாவட்டம் அரகு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் கிடாரி சர்வேஸ்வர ராவ். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த அவர், தனது ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. சுவேரி சோமுவுடன் தனது தொகுதிக்குட்பட்ட மலைவாழ் கிராமமான தூட்டங்கி கிராமத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிடாரி சர்வேஸ்வர ராவ், மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துவிட்டு திரும்பியுள்ளார்.

அடர்ந்த வனப்பகுதிக்கு வந்தபோது, அவர்களை வழிமறித்த 50 பேர் கொண்ட பெண் மாவோயிஸ்ட்கள், எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவைவும், முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமுவையும் சுட்டுக்கொன்றனர். இதனை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் தும்மிரிகூடா காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர்.

மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகங்கள் மற்றும் நாற்காலிகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. போலீசார் பாதுகாப்பு அலட்சியத்தின் காரணமாகவே மாவோஸ்டுகள் எம்.எல்.ஏ.-வை சுட்டுக்கொன்றதாக எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.