ஆந்திராவில், பெண்கள் நைட்டி அணிந்துகொண்டு வீட்டைவிட்டு வெளியே பொது இடங்களுக்கு வரக்கூடாது என்றும், மீறினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும், தகவல் கொடுப்பவர்களுக்கு 1000 ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெண்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தோகலபள்ளி என்கிற கிராமத்தில் பெண்கள் பகலில் நைட்டி அணிய தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இந்த கிராமத்தில், வட்டி என்கிற இனத்தை சார்ந்த மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள்.
அந்த இனத்தை சேர்ந்த 9 பேரை வட்டி இனத்தின் தலைவர்களாக மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அவர்கள் கூறுவதை வேத வாக்காக எண்ணி அதன்படி செயல்படுவது மக்களின் வழக்கம். அந்த வகையில், தோகலபள்ளி கிராமத்தில் உள்ள பெண்கள் பகலில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நைட்டி அணிய வட்டி இன தலைவர்கள் தடை விதித்து உள்ளனர்.
அதனை மீறி பகலில் நைட்டி அணியும் பெண்கள் ரூபாய் 2 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். பெண்கள் பகலில் நைட்டி அணிந்திருப்பதை பார்க்கும் நபர் வட்டி இன தலைவர்களுக்கு அதனை தெரியப்படுத்தினால் அவருக்கு 1000 ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.