சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து 1077, 1913 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்

1008

சென்னை: தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. சுமார் 25 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்யக்கூடும் என்பதால் தமிழத்திற்கு ரெட் அலர்ட் முறை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பெய்தால் அந்த பகுதிகளில் ரெட் அலர்ட் முறை பிறப்பிக்கப்படும். மேலும் ரெட் அலர்ட் முறை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் மிக மிக மோசமான வானிலை நிலவும். பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதிகள் துண்டிக்கப்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படும்.

மேலும் ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் தங்கள் உயிரையும், உடமையையும் பாதுகாத்து கொள்ள வேண்டும். உள்ளூர் நிர்வாகம் மற்றும் அவசர நிலையை எதிர்கொள்ளும் அமைப்புகளின் அறிவுரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.

இந்நிலையில் தமிழகத்தில் மழை அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் கூறியுள்ளார். இதனிடையே சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து மக்கள் தொடர்பு கொள்ள இரு எண்களை மாவட்ட ஆட்சியர் சன்முகசுந்தரம் வெளியிட்டுள்ளார்.

மழை பாதிப்பு குறித்து பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ‘1077’ என்ற எண்ணுக்கும், சென்னை மாநகராட்சிக்கு ‘1913’ என்ற எண்ணுக்கும் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இது தவிர, மாநகராட்சி, 3 கோட்டாட்சியர்கள், 16 வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகளையும் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

Advertisement