கோதுமைக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு 105 ரூபாய் உயர்த்த ஒப்புதல்

757

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், கோதுமை உள்ளிட்ட தானிய வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 105 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் கோதுமை ஆயிரத்து 840 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பார்லிக்கான ஆதார விலை, 30 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, குவிண்டால் ஆயிரத்து 440 ரூபாயாகவும்,  மூக்கடலை 220 ரூபாய் உயர்த்தப்பட்டு, குவிண்டால் 4 ஆயிரத்து 620 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மசூர் பருப்பின் ஆதார விலை 225 ரூபாயும், கடுகுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு 200 ரூபாயும், குங்குமப்பூவுக்கான ஆதார விலை 845 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தானியங்களின் ஆதார விலை உயர்வால், விவசாயிகளுக்கு 62 ஆயிரத்து 635 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

வேளாண் ஆலோசனை குழுவின் பரிந்துரை அடிப்படையில், ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து ரபி பருவ தானியங்களுக்கும் அவற்றின் உற்பத்தி விலையை விட 50 சதவீதம் முதல் 112 சதவீதம் வரை ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement