Extra Mark வேணுமா..? – மீண்டும் எழுதலாம் பரீட்சை

302

பெருந்தொற்றால் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தவிர, பிற செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்த மாணவர்கள், தேர்வுக்கான கட்டணம் செலுத்தியிருந்தால் ஆல் பாஸ் என தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், இதற்கு பல்கலைகழக மானியக்குழு எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பான வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், அனைத்து கல்லூரிகளுக்கும் சென்னை பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் நடப்பு செமஸ்டர் தேர்வு வரும் 21ஆம் தேதி முதல் ஜனவரி 6ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செமஸ்டர் தேர்வின் போதே, அரசால் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்ட அரியர் மாணவர்களும் தங்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் தேவைப்பட்டால், மீண்டும் தேர்வை எழுதி கூடுதல் மதிப்பெண்களைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் அவரவர் படித்த கல்லூரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் பட்டியலை ஒப்படைக்க உறுப்பு கல்லூரிகளுக்கு சென்னை பல்கலைகழகம் உத்தரவிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக அரியர் வைத்து, கிளியர் செய்ய முடியாமல் தவிக்கும் மாணவர்களும் இந்த ஆன்லைன் செமஸ்டர் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம் என பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 115 உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த ஒரு லட்சத்து 9 ஆயிரம் மாணவர்கள் அரியர் தேர்வெழுத கட்டணம் செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement