நீதிமன்ற அனுமதியோடு மீண்டும் தியான நிகழ்ச்சி நடக்கும் – ஸ்ரீஸ்ரீரவிசங்கர்

473

உரிய அனுமதியோடு தஞ்சை பெரிய கோவிலில் தியான நிகழ்ச்சி நடைபெறும் என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின் சார்பில் தியான நிகழ்ச்சி நடத்த உயர்நீதிமன்றம் கிளை தடை விதித்துள்ளது. மேலும் அரசுக்கு சரமாரியாக கேள்விகளையும் எழுப்பியது. தஞ்சை பெரிய கோயில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயில் பழமையானது. தொல்லியல் பாரம்பரியமிக்கது என யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. இங்கு வாழும்கலை அமைப்பின் மூலம் 2 நாட்கள் தியான நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அவசர வழக்காக நேற்று விசாரித்தனர். ஏற்கனவே ஒருமுறை கும்பாபிஷேகம் நடந்தபோது தீவிபத்து ஏற்பட்டது. இங்குதான் நடத்த வேண்டுமா? வேறு இடமே இல்லையா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி, இங்கு நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர். மேலும் நிகழ்ச்சி தொடர்பான எந்த பொருட்களும் அங்கு இல்லை என்பதை உறுதி செய்து தஞ்சை கலெக்டர், எஸ்பி, தொல்லியல் துறையினர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் ஏதேனும் மீறியிருந்தால் நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பிக்கும் என்று உத்தரவிட்டனர்.

இதனையடுத்து கோயிலில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டு தனியார் மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் தியான நிகழ்ச்சி நடத்துவோம் என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of