குறிப்பிட்ட தேதிகளில் ஆஜராக வேண்டும் – ஆறுமுகசாமி ஆணையம் எச்சரிக்கை

934

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாத அப்பல்லோ மருத்துவர்களுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் எச்சரிக்கை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாத அப்பல்லோ மருத்துவர்களுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான அணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையம், அப்பல்லோ மருத்துவர்கள் சிலரை, இம்மாதம் 5,6,7 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது.

அவர்கள் ஆணையத்தில் ஆஜராகாத நிலையில், ஆஜராவதற்கு ஒரு வாரம் முன்பாகவே தங்களுக்கு சம்மன் கிடைக்கும் வகையில் கால அவகாசம் வழங்க வேண்டும் என அப்பல்லோ தரப்பில் விசாரணை ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணைக்கு பின்னர், ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில், அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி.ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஆணையத்தில் ஆஜராக வேண்டியவர்களின் விபரம் இனி தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், அந்த தேதியில் அவர்கள் ஆணையத்தில் ஆஜராகவில்லை என்றால், தங்கள் மீதும், அப்பல்லோ மருத்துவமனை இயக்குனர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement