வங்கிகள் கடன் நீக்கம் என்றால் கடன் தள்ளுபடி என்பது பொருள் அல்ல: அருண் ஜேட்லி

279

புதுடெல்லி: வங்கிகள் கடன் நீக்கம் என்று குறிப்பிடுவதற்கு கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக பொருள் அல்ல என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் 21 பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடனில் இருந்து 44 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்பட்ட நிலையில், 3 லட்சத்து
16 ஆயிரத்து 500 கோடி கடன் தொகை நீக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அருண்ஜேட்லி, கடன் நீக்கம்
என்பது ஆண்டு கணக்கு புத்தகத்தில் இருந்து நீக்கப்படுவதே தவிர, கடன் தள்ளுபடி அல்ல என்று தெரிவித்துள்ளார். அந்த கடன் தொகை செலுத்தப்படும் வரை
தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு நிதி ஆண்டில் ஒரு லட்சத்து 81 ஆயிரம் கோடி வாராக்கடன் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் காலண்டில் 36 ஆயிரத்து 551 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகவும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.