அசாமில் குண்டு வீச்சு – பயங்கரவாதிகள் 2 பேர் கைது

449

அசாமில் வணிக வளாகம் மீது குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக டி.வி. நடிகை மற்றும் உல்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அசாம் தலைநகர் கவுகாத்தியில் ஜு ரோடு பகுதியில் புகழ் பெற்ற வணிக வளாகம் மீது கையெறி குண்டுகளை வீசினார்கள்.

வணிக வளாகம் அருகே குண்டு வெடித்தது. இதில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். இதில் 2 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த குண்டு வெடிப்புக்கு உல்பா (சுதந்திரா) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

இந்த குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக டி.வி. நடிகை ஜஹ்னவிசைக்கியா, உல்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பிரானா மொய் ராஜகுரு ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் பாஞ்சாபாரி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். அந்த வீட்டை போலீசார் சோதனை செய்த போது 70 கிலோ வெடி மருந்து கையெறி குண்டு தயாரிக்க இரும்பு பைப், துப்பாக்கி, 35 தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் கமி‌ஷனர் தீபக்குமார் கூறும் போது, ராஜகுரு உல்பா அமைப்பின் மூத்த உறுப்பினர். அவர் 1986-ம் ஆண்டு உல்பா அமைப்பில் இணைந்தார். அவர் ஸ்லீப்பர் செல் போல் செயல்பட்டு வந்துள்ளார். அவருக்கு நடிகை ஜஹ்னவிசைக்கியா, உதவி செய்துள்ளார் என்றார்.

ராஜகுருவை கைது செய்து போலீசார் வீட்டில் இருந்து அழைத்து வந்த போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களது கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும். இது போன்ற சம்பவங்கள் தொடரும் என்று அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.

அசாமில் 29 ஆண்டுகளாக இருந்த ஆயுதப்படை சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் திரும்ப பெற்றது. அங்கிருந்த ராணுவம் திரும்ப உத்தரவிட்டது. ஆனால் இன்னும் ராணுவமும் அசாமில் இருந்து செல்லவில்லை. இதை கண்டித்து குண்டு வீச்சு சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of