தற்கொலை செய்துகொள்ளும் அசாம்வாசிகள்..! -சோகக்கதையின் பின்னணி

601

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான அசாமில் தங்கியுள்ள சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதாக கூறி இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் நாற்பது லட்சம் மக்கள் வழி தெரியாது திணறி வருகின்றனர்.

நாடு கடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதை அறிந்த சிலர் அச்சத்தின் காரணமாக தங்களது உயிர்களை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மே மாதம், ரமலானை ஒட்டி விரதம் இருந்த 88 வயதான அஷரப் அலி, அந்நாளின் இறுதியில் நோன்பை முடிப்பதற்காக செல்வதாக கூறினார்; ஆனால், அவர் மீண்டும் திரும்பவே இல்லை. தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

முன்னதாக, தான் ஓர் இந்தியர் என்பதை நிரூபிக்கும்படி அரசால் கேட்டுக்கொள்ளப்பட்டவர்களின் பட்டியலில் இருந்த அலிக்கு எதிராக அவரது பக்கத்து வீட்டுக்காரரே தகவல் தெரிவித்ததால், அலி மீண்டுமொரு முறை தனது குடியுரிமையை உறுதிசெய்ய வேண்டுமென்று அரசு சம்மன் அனுப்பியது.

“தனது குடியுரிமையை மீண்டும் நிரூபிக்கும் முயற்சியில் தோல்வியடைந்துவிட்டால், மீண்டும் தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவோமோ என்ற அச்சத்தின் அவர் தற்கொலை செய்துக்கொண்டார்,” என்று கூறுகிறார் சக கிராமவாசியான முகமது கனி.

அசாமில் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் வங்கதேசக் குடியேறிகளை, சட்டபூர்வமான இந்தியக் குடிமக்களில் இருந்து பிரித்தறிவதற்காக என்.ஆர்.சி எனும் தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்படுகிறது.

இதற்காக அசாமில் உள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரும் இந்தப் பதிவேட்டில் இடம் பெற விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

மொத்தம் 3.29 கோடி பேர் இந்தப் பதிவேட்டில் இடம் பெற விண்ணப்பித்திருந்தனர். ஆனால், கடந்தாண்டு ஜூலை மாதம் வெளியான வரைவுப் பதிவேட்டில் 2.89 கோடி பேரின் பெயர்களே இடம்பெற்றிருந்தன. எஞ்சிய சுமார் 40 லட்சம் விண்ணப்பதாரர்களின் பெயர்கள் இந்தப் பதிவேட்டில் இடம் பெறவில்லை.

இந்நிலையில், சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய பட்டியலில், மேலும் 1,00,000 அசாம்வாசிகளை சேர்ப்பதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் அரசு அறிவித்தது.

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியல் அடுத்த மாதம் 31ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் தங்களது குடியுரிமையை கோரி விண்ணப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபோன்ற விவகாரங்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிப்பதற்காகவே அசாமில் 1980களிலிருந்து தீர்ப்பாயங்கள் செயல்பட்டு வருகின்றன. அசாமில் ‘சந்தேகத்திற்குரிய’ வகையில் திரிபவர்கள் அல்லது ‘சட்டவிரோத குடியேறிகளாக’ அடையாளம் காணப்படுபவர்கள் மீது இது நடவடிக்கை எடுக்கும்.

அரசின் இந்த நடவடிக்கை மக்களிடையே, குறிப்பாக அசாமின் சிறுபான்மையினரான வங்க மொழி பேசும் குடியேறிகளிடையே அச்சத்தையும், கொந்தளிப்பையும் உண்டாக்கியுள்ளது.

அசாமை பூர்விகமாக கொண்ட மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து அதன் மூலம் அரசியல் ஆதாயத்தை பெரும் நோக்கில் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது இதன் வாயிலாக உச்சகட்ட நிலையை அடைந்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டை மேம்படுத்துவதற்கான பணிகள் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, குடியுரிமை இழப்பு மற்றும் தடுப்புக்காவல் ஆகியவற்றை சந்திக்கக்கூடும் என்ற அச்சத்தில், ஏராளமான வங்காள இந்துகள் மற்றும் முஸ்லிம்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

குடியுரிமை இழப்புடன் தொடர்புடைய அச்சம் மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக அசாமில் இதுவரை 51 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக கூறுகிறார் சட்ட உதவி அமைப்பொன்றை சேர்ந்த சாம்சர் அலி. கடந்தாண்டு ஜனவரி மாதம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதலாவது வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட பிறகே, அவற்றில் பெரும்பாலான தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்ததாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மரணங்கள் ‘இயற்கையானது அல்ல’ என்பதை ஒப்புக்கொள்ளும் காவல்துறை, ஆனால் அவற்றுக்கும் குடியுரிமை பிரச்சனைக்கும் தொடர்புள்ளதாக கூறுவதற்கு தன்னிடம் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறுகிறது.

“தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதலாவது வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட பிறகே, அசாமில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எனது குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆதாரங்களை, தற்கொலை செய்தவர்களின் உறவினர்களை சந்தித்து நேரடியாக திரட்டியுள்ளேன்” என்று கூறுகிறார் 2015ஆம் ஆண்டு முதல் குடியுரிமை தொடர்பாக தற்கொலை செய்துக்கொண்டவர்கள் குறித்த ஆதாரத்தை திரட்டி வரும் அப்துல் கலாம் ஆசாத்.

தனது மனைவி வரைவு பட்டியலில் இடம்பெறாததால், கடந்த நவம்பர் மாதம் 46 வயதான தினக்கூலி தொழிலாளரான சம்சுல் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறுகிறார் சமூக செயற்பாட்டாளர் சாம்சர் அலி.

வரைவு பட்டியலில் இடம்பெறவில்லை, இடம்பெற முடியாமல் போய்விடுமோ போன்ற காரணங்களினால் தற்கொலை சம்பவங்கள் நடப்பது ஒருபுறம் இருக்க, தங்களது குடியுரிமையை நிரூபிக்கும் சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாமலும் பலர் தற்கொலை செய்துகொள்ளும் மோசமான சூழ்நிலையும் நிலவுகிறது.

அசாமின் உடல்கிரி மாவட்டத்தை சேர்ந்த 49 வயதான பபேன் தாஸ், குடியுரிமை வழக்கு தொடர்பான செலவுகளுக்காக பெற்ற கடனை அடைக்க முடியாததால் கடந்த நவம்பர் மாதம் உயிரிழந்துவிட்டார். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், இதே காரணத்தில்தான் தாஸின் தந்தையும், இதே குடியுரிமை சார்ந்த பிரச்சனையினால்தான் 30 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துக்கொண்டார்.

அதேபோன்று, அசாமில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த நிரோட் பரணும் குடியுரிமை சார்ந்த அச்சம் மற்றும் அதுசார்ந்த கடன் பிரச்சனையின் காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு சமீபத்தில் தற்கொலை செய்துக்கொண்டார்.

“உள்ளுரில் தனது கல்வியை முடிந்த தாஸ், இந்தியாவை சேர்ந்தவர் என்று அவரது கல்வி சான்றிதழ்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் செயல்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டு அதிகாரிகளே எனது அண்ணனின் மரணத்திற்கு காரணம்” என்று கூறுகிறார் அகில் சந்திர தாஸ்.

இவ்வாறாக, இயல்பு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருந்த மக்கள், அரசின் நடவடிக்கையால் செய்வதறியாது, கடைசியாக தற்கொலை செய்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of