அசாம் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் ..!

77

அசாமில் 2008-ம் ஆண்டு அக்டோபரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 88 பேர் இறந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

போடோ இன மக்களுக்காக தனியாக போடோலாந்து நாடு கோரி என்டிஎப்பி தீவிரவாத இயக்கத்தினர், 2008-ல் குண்டுவெடிப்பை நடத்தினர்.

மொத்தம் 9 இடங்களில் குண்டுவெடித்தது. முதல் குண்டு அப்போதைய முதல்வர் தருண் கோகோய் அலுவலகத்துக்கு 300 மீட்டர் தூரத்தில் வெடித்தது.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக 22 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் 15 பேரைக் கைது செய்து சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

இன்னும் 7 பேர் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் 19 பேர் மீது ஒரு குற்றப்பத்திரிகை, 3 பேர் மீது மற்றொரு குற்றப்பத்திரிகை என 2 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மொத்தம் 650 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. 687 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.விசாரணை நிறைவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் என்டிஎப்பி தலைவர் ரஞ்சன் தைமாரி உள்பட 15 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இவர்களுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.