திருச்சியில் காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு முத்தம் கொடுத்த விவகாரம் தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த வெள்ளி கிழமை இரவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணியன் சோமரசம்பேட்டை பகுதியில் ரோந்து பணியை முடித்து காவல் நிலையம் வந்துள்ளார்.

அங்கு திருச்சி புத்தூர் பகுதியை சேர்ந்த பெண் காவலர் சூரியகலா கணினியில் வழக்கு சம்பந்தமாக பதிவு செய்து கொண்டிருந்ததகவும், அப்போது அவர் அருகில் வந்த பாலசுப்ரமணியன் சூர்யகலவை கட்டி பிடித்து முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது மற்ற போலீசாருக்கு தெரிய வரவே பெண் காவலர் சூரியகலா நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக்கிடம் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பாலசுப்ரமணியன் பெண் காவலர் ஒத்துழைப்புடன் தவறு நடந்ததாகவும், காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்க்கட்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.