இந்தோனேசியா சுனாமி – உயிரிழந்தோர் எண்ணிக்கை 222 ஆக உயர்வு

286

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமி அலைகள் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவில் அனாக் கிரகடாவ் என்ற மலை கடந்த சில நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. அதில் இருந்து புகை வெளியே வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு திடீரென வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சம் அடைந்தனர். இதற்கிடையே, சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து திடீரென ராட்சத சுனாமி அலைகள் தோன்றியது. சுமார் 65 அடி உயரம் (20 மீட்டர்) அலைகள் எழும்பி கரையை வந்தடைந்தன. இந்த சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின.அங்கு சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்களை அழித்து தரைமட்டமாக்கின. சாலைகள், ஓட்டல்களுக்குள் கடல்நீர் புகுந்ததால் பீதி அடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

சுனாமி தாக்குதலில் முதல் கட்டமாக 43 பேர் பலியானதாக தகவல் வெளியானது. பின்னர் உயிர்ச்சேதம் 168 ஆக உயர்ந்தது. மேலும், 750 பேர் காயம் அடைந்தனர் என்றும் 30 பேரை காணவில்லை என்றும் தெரிவித்தனர். இந்நிலையில், தற்போது பலியானோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.