”உலக கோப்பையை ஆஸ்திரேலியா வெல்லும்” – கம்பீர் சொல்லும் காரணம்

520

இங்கிலாந்தில் நடக்கும் 12-வது உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்பிருப்பதாக கவுதம் காம்பிர் கணித்துள்ளார்.

12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்கிறது.

இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. ரவுண்டு ராபின் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது.

இந்த நிலையில் உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்று இருந்தவருமான கவுதம் காம்பிர் கணித்து உள்ளார்.

இது தொடர்பாக ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் காம்பிர் கூறியதாவது:-

என்னை பொறுத்தவரை இந்த உலகக்கோப்பையையும் ஆஸ்திரேலியாவே வெல்ல வாய்ப்பு உள்ளது. அந்த அணி நிச்சயமாக இறுதிப் போட்டிக்கு நுழையும். உலகக்கோப்பையை வெல்ல அடுத்து வாய்ப்பு உள்ள அணிகளில் இங்கிலாந்து, இந்தியா உள்ளன.

இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் பலம் பெற்று இருக்கிறது. ரோகித், கோலியின் ஆட்டத்தை பொறுத்து மிகப்பெரிய ஸ்கோரை குவிக்கும். பந்து வீச்சில் பும்ரா துருப்புச் சீட்டாக இருப்பார்.

இந்த உலகக்கோப்பை போட்டி முறை சுவாரசியமானது. ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியத்துவம் பெற்றது.

உலகக்கோப்பையை வெல்ல 2-வது வாய்ப்பாக இங்கிலாந்தை நான் கூறுவதற்கு சொந்த மண்ணில் விளையாடுவதால் அல்ல. அந்த அணியில் எல்லா வரிசையிலும் ஆடக்கூடிய திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது.

2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நான் சதத்தை தவறவிட்டதாக வருத்தப்படவில்லை. எங்களது ஒரே இலக்கு உலகக்கோப்பையை வெல்வதே.

எனது பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். 97 ரன் என்பது அணிக்கு முக்கியமானது. 3 ரன்னில் சதத்தை நழுவ விட்டதற்காக நான் வருத்தம் அடைந்தது கிடையாது.

நானும் டோனியும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 109 ரன் எடுத்தது முக்கியமானது. இறுதிப் போட்டியில் நான் எந்தவித நெருக்கடியுடனும் ஆடவில்லை.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of