பிளாஸ்டிக் ‘STRAW’ க்கு BYE BYE

2021

நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே… ஆனால் நம்மில் எத்தனை பேர் பிளாஸ்டிக்கை தவிர்த்து வாழ்கிறோம் என்பது கேள்விக்குறியே…

இந்நிலையில் சிறிது சிறிதாக பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தும் நிலையில் அதற்கான முயற்சியை முன்னெடுத்திருக்கிறார் குமரியை சேர்ந்த பள்ளி மாணவி சித்ரா… அவரின் முயற்சியை பற்றி எடுத்துரைக்கிறது இந்த செய்தி தொகுப்பு….

நமக்கும் நமது சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிப்பத்தில் முக்கிய பங்கு வகிப்பது பிளாஸ்டிக். பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க முதலில் அதன் பயன்பாட்டை குறைக்க தொடங்க வேண்டும்.

இதனை நம் வீட்டிலிருந்தே நாம் தொடங்க வேண்டும். குறிப்பாக மாணவர்களும், இளைஞர்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தன்னால் முடிந்த முதல் படியை தொடங்கியிருக்கிறார் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவியான சித்ரா. நாம் பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை அருந்த ஸ்ட்ராவை பயன்படுத்துவோம்.

இளநீர் ,பழச்சாறுகள் இயற்கை பானங்கள் என்றாலும் அதனை அருந்த நாம் பிளாஸ்டிக்கால் ஆன ஸ்ட்ராவையே பயன்படுத்துகிறோம். இதனை மாற்றும் வகையில் பள்ளி மாணவியான சித்ரா இயற்கை முறையில் ஸ்ட்ரா ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்.

ஆம், சார்ட் பேப்பர், மரவள்ளிக்கிழங்கு மாவு, மஞ்சள் தூள், இயற்கை விதிகளுக்கு உட்பட்ட பவுடர் கோட்டிங் ஆகியவற்றை பயன்படுத்தி இந்த ஸ்ட்ராவானது உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் கவனிக்க கூடிய விஷயம் என்னவென்றால் இந்த ஸ்ட்ராவானது பயன்பாட்டுக்கு பிறகு மக்கி போகும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது …. இதே போல் காகித பைகளையும் மாணவி சித்ரா தயாரித்துள்ளார். ஏற்கனவே காகித பைகள் இருந்த போதிலும் இந்த காகித பையானது 8 மணி நேரம் ஈரப்பதம் கொண்ட பொருட்களை தாங்க கூடியது….

பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களை வலியுறுத்தும் அரசானது பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக அமைந்த இந்த மாதிரியான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் இயற்கை ஆர்வலர்கள் இதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.

முழுமையான இயற்கை சூழலுக்கு மீண்டும் வித்திடும் இந்த மாதிரியான திட்டங்கள் வரவேற்க்ககூடியது என்றால் அது மறுப்பதற்கு அல்ல……

சத்தியம் செய்திகளுக்காக கன்னியாகுமரி செய்தியாளர் விமலாவுடன் செய்திக்குழு…

Advertisement