பணமதிப்பிழப்பு நடவடிக்கை! 50 லட்சம் பேர் வேலையிழப்பு! அறிக்கை மூலம் அம்பலம்!

521

பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். மதிப்பிழப்பு ரூபாய் நோட்டுகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வங்கிகளில் செலுத்தி டெபாசிட் செய்யவும், மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் பலர்  எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், பெங்களூரு அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலையான வேலை வாய்ப்பு மையம், ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள வேலையின்மை குறித்து ஆய்வு நடத்தியுள்ளது.

இந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு:-

1. 2016-2018 இடையே (ரூபாய் நோட்டு மதிப்பிழப்புக்கு பின்னர்) 50 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இருப்பினும் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கும், இதற்கும் நேரடி தொடர்பு இல்லை. வேலை இல்லா திண்டாட்டத்தின் போக்கு இவ்வாறாக அமைந்துள்ளது.

2. 2011-ம் ஆண்டில் இருந்து வேலை இல்லா திண்டாட்டம் சீராக பெருகி வந்துள்ளது. 2018-ம் ஆண்டில் ஒட்டுமொத்த வேலை இல்லா திண்டாட்ட விகிதம், 6 சதவீதமாக உள்ளது. 2000-2011 காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது இரு மடங்கு ஆகும்.

3. வேலை இல்லா திண்டாட்டத்துக்கு ஆளாகி இருப்போர் பெரும்பாலும் அதிகபட்ச கல்வி தகுதி உடையவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆவர். வேலை இல்லாதோரில் 20-24 வயது உடையவர்களே அதிகம். நகர்ப்புறங்களில் வேலைபார்ப்பவர்களில் இந்த வயது உடையவர்கள் 13½ சதவீதம்தான். ஆனால் வேலை இல்லாதவர்களில் இந்த வயதினர் 60 சதவீதம் பேர் உள்ளனர்.

பி.எல்.எப்.எஸ். என்று அழைக்கப்படுகிற கால இடைவெளி தொழிலாளர் சக்தி ஆய்வு மையம் மற்றும் இந்திய பொருளாதார கண்காணிப்புக்கான நுகர்வோர் பிரமிடு ஆய்வு மையம் ஆகியவற்றிடம் இருந்து பெற்ற தகவல்கள் அடிப்படையில்தான் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தினர் ஆய்வு நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of